சென்னை: வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக பேரிடர் காலங்களில் தமிழகத்தை அமைப்பு ரீதியாக பாதுகாப்பதே அரசின் தொலைநோக்கு திட்டம் என்று அமைச்சர் உதயகுமார் ஜம்முவில் நடந்த கருத்தரங்கில் பேசினார். ஒரே இந்தியா சிறப்பான இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரேதசங்கள் கூட்டாக சேர்ந்து நீர் ஆற்றல், நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் தத்தம் அனுபவங்கள் மற்றும் இணைந்து பணியாற்றுவது குறித்த கருத்தரங்கம் ஜம்முவில் நேற்று நடைபெற்றது. தமிழகம் சார்பில், நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:தமிழகத்தில் கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழையின்போது கஜா (2018), ஒக்கி (2017), வர்தா (2016), நீலம் (2012), தானே (2011), ஜல் (2010) மற்றும் நிஷா (2008) ஆகிய புயல்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் புதிய பாடங்களை நமக்கு கற்பித்துள்ளன.