சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீர் பல விமானங்கள் திரும்பின: ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை விமான நிலையத்தின் ஓடு பாதையில் மழை நீர் தேங்கியதால் விமான சேவை கடும் பாதிப்படைந்தது. பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரை பலத்த மழை பெய்ததன் காரணமாக சென்னை விமான நிலையத்தில்  விமான சேவைகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா, பக்ரைன், குவைத், தோகா, ஜெர்மன், அபுதாபி போன்ற இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்களும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களுமாக மொத்தம் 35க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதே போல் வெளி நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் சுமார் 30 விமானங்கள் தாமதமாக வந்து தரை இறங்கின. சென்னையில் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை குளம் போல் மழை நீர் தேங்கியதே இதற்கு காரணம். இதனால் இந்த விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

அதன் பின்பு மழை சிறிது நேரம் விட்டதும், ஓடு பாதையில் தேங்கி இருந்த மழை நீர் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டது. அதன் பின்பு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கின. இதற்கிடையே அபுதாபியில் இருந்து சென்னை வந்த எத்தியார்டு ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த சில்க் ஏர் லைன்ஸ் விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்திற்கு  திருப்பி அனுப்பப்பட்டன. அதே போல் கோவை, அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த 2 உள்நாட்டு விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த இன்டிகோ ஏர் லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை ரத்து செய்யப்பட்டடது. மேலும் பலத்த மழை காரணமாக சென்னை நகரில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் ஆறு போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. விமானங்களை இயக்குவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானிகள், விமான பெறியாளர்கள், விமான பணிப்பெண்கள் வர தாமதம் ஆனதாலும் ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக வந்ததாலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பெரும்பாலான விமானங்கள்  மிகுந்த தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories: