எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ2.12 கோடியில் நகரும் படிக்கட்டு: தயாநிதி மாறன் எம்.பி திறந்து வைத்தார்

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ2.12 கோடியில், எழும்பூர் ரயில் நிலைய 7வது நடைமேடையில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தயாநிதி மாறன் எம்.பி நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்   ஆர்.எஸ்.பாரதி  மற்றும் எம்எல்ஏக்கள் ப.ரங்கநாதன், பி.கே.சேகர்பாபு, தாயகம்கவி, ரவிச்சந்திரன் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ், சென்னை கோட்ட மேலாளர் மகேஷ், எழும்பூர் நிலைய அதிகாரி ஜெயவெங்கடேசன், ஆர்பிஎப் கமிஷனர் சந்தோஷ் சந்திரன் மற்றும் எழும்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது: இந்தியாவிலேயே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகளவில் ஒதுக்கியது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தான்.

பெரம்பூர் லோகோ மேம்பாலம் ரூ9 கோடி செலவில் கட்டப்பட்ட  பெருமை திமுக தலைவரையே சாரும். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் அதிகளவில் பயணிகள் வந்து செல்வதால், அவர்களின் நலன் கருதி, ரூ2.12 கோடியில் நகரும் படிக்கட்டு அமைத்துள்ளோம். மத்திய பாஜ சுத்தமான இந்தியா என்று சொல்லிக்கொண்டு வருகிறது. ஆனால், தாம்பரம் - சென்ட்ரல் மற்றும் திருவொற்றியூர் - சென்ட்ரல் வழித்தடங்களில் எந்த ரயில் நிலையத்திலும் கழிப்பறை வசதி இல்லை. தினசரி லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருவதால், ரயில் நிலையங்களில் கழிப்பறையின் அவசியம் குறித்து ரயில்வே பொது மேலாளரிடம் எடுத்துரைத்தோம். எங்களது பல நாள் கோரிக்கையை ஏற்று, தற்போது ரயில் நிலையங்களில்  கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் செயல்படாமல் இருந்தது.

தற்போது அதை சரி செய்துள்ளனர். மேலும், தற்போது நகரும் படிக்கட்டுகள் மேலே ெசல்வதற்கு மட்டுமே வைக்கப்படுகின்றன. இனிமேல் கீழே இறங்குவதற்கும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் லிப்ட் வசதி அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்கான  கோரிக்கைகளுடன் நாங்கள் தொடர்ந்து தெற்கு ரயில்வே அதிகாரியை சந்திப்போம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின் பேரில் மக்கள் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறோம். தொடர்ந்து பல வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய பிரச்னைகளை  வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கின்றனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: