கேட்பாரற்ற வாகனங்களை அகற்றிய சென்னை போலீசுக்கு மத்திய அரசு விருது

சென்னை: சாலையில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் ‘ஸ்வாச் காவல் நிலையங்கள்’  என்ற  மத்திய அரசின் ‘ஸ்காட்ச்’ விருதை சென்னை காவல்துறை பெற்றுள்ளது. காவல் நிலையங்களில் கேட்பாரற்று கைவிடப்பட்ட வாகனங்களால் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடங்கள்  தூய்மையின்றி இருந்தன. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து காவல் நிலைய அதிகாரிகளின் முயற்சியால் இந்த வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அவ்வாறு காவல் நிலையங்களில் இருந்த சுமார் 10,000 வாகனங்களை 2018ம் ஆண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உதவியுடன் வாகன உரிமையாளர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பெற்றுக்கொள்ள வசதியாக  நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டது.  

அதன் மூலம் 2,125 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உரிமை கோரப்பட்ட வாகனங்களை தவிர கைவிடப்பட்ட வாகனங்கள் 7,875 ஆக இருந்தது. அவற்றில் 90 மூன்று சக்கர வாகனங்கள், 102 நான்கு சக்கர வாகனங்கள் 7,683  இருசக்கர வாகனங்கள்  ஆகும். இவ்வாகனங்களை உரிய நடவடிக்கை மேற்கொண்டு  சென்னை மாநகராட்சியின் மூலம் ஏலம் விடப்பட்டது. 2019ம் ஆண்டு சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யாரும் உரிமை கோரப்படாத 3,083 வாகனங்கள் மற்றும் 12,740 கிலோ எடையுள்ள சிதிலமடைந்து குவியல்களாக இருந்த இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு  உரிய நடவடிக்கைக்கு பின்னர் சென்னை மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது.

இதற்காக, “தூய்மையான காவல் நிலையங்கள் பிரிவின் கீழ் மத்திய அரசின் ‘ஸ்காட்ச்’ விருதை சென்னை காவல் துறை பெற்றுள்ளது.

Related Stories: