இதுவரை 184 எம்சாண்ட் குவாரிகளுக்கு சான்றிதழ் தமிழகத்தில் மேலும் 30 குவாரிகள் சான்றிதழ் பெற விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 30 எம் சாண்ட் குவாரிகள் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக  ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 1200 குவாரி உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்பேரில் தற்போது வரை 184 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 30 குவாரிகள் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. இந்த குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு கூட்டம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பேர் அடங்கிய நிபுனர்கள் குழுவினர் ஆய்வு செய்து விண்ணப்பித்த குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஒரிஜினல் எம்சாண்ட் எங்கெங்கு கிடைக்கும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஒரிஜினல் எம்சாண்ட் எங்கெங்கு கிடைக்கும் என்பது தொடர்பாக அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று கோட்ட செயற்பொறியாளர்கள் மூலம் பத்திரிக்கைகளில் விளம்பரம் தரவும் உத்தரவிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: