மூட்டைய திருடுனாங்கோ... கடையில திருடுனாங்கோ... இப்போ குவித்து வைத்திருந்த வெங்காயம் லாரியில் வந்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

பெங்களூரு: வெங்காயம் விலை எகிறியதை தொடர்ந்து கொள்ளையர்களின் கவனம் வெங்காயத்தின் மீது திசை திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கடையை உடைத்து, வெங்காயத்தை கொள்ளை அடித்து சென்றனர். அடுத்த இரண்டு நாட்களில், ரூ.25 லட்சம் மதிப்பிலான வெங்காயத்தை லாரியுடன் டிரைவர் கடத்தி சென்றுவிட்டார். லாரி சிக்கினாலும் டிரைவர் மற்றும் வெங்காயம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடகாவிலும் தற்போது இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இம்மாநிலத்தின் கதக் நகரில் வெங்காயத்தை அறுவடை செய்த விவசாயிகள் அதை வயலில் குவித்து வைத்திருந்தனர்.

இதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் இரவில் லாரியுடன் வந்து அதை ஏற்றிக்கொண்டு வந்த இடம் தெரியாமல் சென்று விட்டனர். 40 குவிண்டால் எடையுள்ள வெங்காயத்தை யார் திருடி சென்றார்கள்? அதை எங்கே சென்று விற்பனை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “மழை வெள்ளத்தினால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது.  வெள்ளத்தில் தப்பி வளர்ந்த செடிகளில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்தோம். காலையில் அதை சந்தைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருந்தோம்.

ஆனால், இரவில் வந்த மர்ம நபர்கள் வெங்காயத்தை கொள்ளை அடித்துவிட்டு சென்றுவிட்டனர் என்றனர். கண்ணீருடன் விளைவித்த வெங்காயத்தை கள்வர்கள் கவர்ந்து சென்ற சம்பவத்தால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: