திருவில்லிபுத்தூர் அருகே அத்திக்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்த முதியவரால் பரபரப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, அத்திக்குளத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. அப்போது எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்து போராட்டம் நடத்திய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே, அத்திகுளம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2016ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதன்பேரில், திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமையிலான வருவாய்த்துறை ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் அத்திக்குளத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை ஜேசிபி மூலம் நேற்று அகற்ற முற்பட்டனர். அப்போது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் முதியவரை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றினர். அப்போது வீடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அத்திக்குளத்தில் திருவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: