திருவண்ணாமலையில் முன்விரோத தகராறு காரணமாக கிராம நிர்வாக அலுவலர் மீது காவலர் ஆசிட் வீச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முன்விரோத தகராறு காரணமாக கிராம நிர்வாக அலுவலர் மீது போலீஸ்காரர் ஒருவர் ஆசிட் வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கேலிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவருக்கும் வேங்கிக்கால் உண்ணாமலையம்மன் நகரில் வசித்து வரும் க்யூ பிரிவு காவலர் ஸ்ரீபாலுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்து வந்தது. ஸ்ரீபாலுவின் மனைவிக்கும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாருக்கும் இருக்கும் தகாத உறவே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீபால் வீட்டில் இல்லாத போது அங்கு சென்ற சிவகுமார், ஸ்ரீபாலுவின் தாயாருடன் சண்டையிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சிவகுமாரின் வீட்டிற்கு சென்ற ஸ்ரீபால் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீபால் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை சிவகுமார் மீது வீசியுள்ளார். தொடர்ந்து அதனை தடுக்க முயன்ற பொது ஸ்ரீபால் மீதும் ஆசிட் பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை கிழக்கு போலீசார் 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த சிவகுமார் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சு குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: