காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இயங்கியது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. இதனால், பெரிய மாவட்டமாக இருந்தது. கடந்த 1997ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரம் இணைந்தது. இதனால் காஞ்சிபுரத்தில் இயங்கிய கலெக்டர் அலுவலகத்துக்கு, கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கும் மக்கள், பல்வேறு கோரிக்கைகளுக்காக சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 100 கிமீ தூரம் வரை பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையொட்டி செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி கடந்த ஜூலை 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. இதைதொடர்ந்து செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய 8 தாலுகாக்களை உள்ளடக்கிய செங்கல்பட்டு தனி மாவட்டம், நேற்று உதயமானது. இதன் தொடக்க விழா செங்கல்பட்டு அரசு ஐடிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உதயகுமார், பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் ஜான்லூயிஸ், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா ஆகியோர் வரவேற்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய மாவட்டத்தையும், புதிய கலெக்டர் அலுவலக மாதிரி வரைப்படம் மற்றும் 113.93 கோடியில் 181 முடிவுற்ற பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வேளாண் கருவிகள், சுயதொழில் ெதாடங்க நிதியுதவி, தாலிக்கு தங்கம், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் வாயலூர் பாலாற்றில் தடுப்பணை கட்டியதற்கு 33 கோடி முதல்வரிடம் வழங்கினர். 128 கோடியில் 213 பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பென்ஜமின், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி,  தங்கமணி, ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். முன்னதாக முதல்வருக்கு செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், ராட்டின கிணறு, மாவட்ட நீதிமன்றம், பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாட்ஷா, செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், ஆலப்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.சல்குரு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளம்பாசறை செயலாளர் பாலூர் சுதேஷ் ஆனந்த் உள்பட பலர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இதையொட்டி, வழிநெடுகிலும் வரவேற்பு தோரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. புதிய செங்கல்பட்டு மாவட்டம் 2945 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில், 25,56,426 பேர் உள்ளனர். 351 ஊராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாவட்டத்தில் முதல் கலெக்டர்

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, இருந்த ஆர்டிஓ அலுவலகத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த அலுவலகம் கலெக்டர் அலுவலகமாக மாற்றப்பட்டது. அந்த கட்டிடத்தில் செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டராக ஏ.ஜான்லூயிஸ் நேற்று பதவியேற்று கொண்டார். புதிதாக அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான்லூயிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பதவி ஏற்று கொண்ட கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், தாசில்தார் சங்கர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று முதல் மனு அளிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் பொதுமக்களின் மனுக்கள்  பெறப்படும். வரும் திங்கள்கிழமை முதல் மக்கள் குறைதீர் கூட்டம்  செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில், மருத்துவக் கல்லூரி  கலையரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு  மாவட்ட எஸ்பி அலுவலகம் வேதநாராயணபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி  வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட உள்ளது. பொதுமக்கள், புகார் சார்ந்த  மனுக்களை வரும் திங்கட்கிழமை முதல் அங்கு அளிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: