தரமில்லாத ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டிய விவசாயி : மயிலாடுதுறை அருகே பரபரப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ரேஷனில் வழங்கப்பட்ட தரமில்லாத அரிசியை விவசாயி ரோட்டில் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் பச்சை, வெள்ளை, காக்கி நிறங்களில் 3 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. பச்சை அரிசி கார்டு, வெள்ளை சர்க்கரை கார்டாகும். காக்கி அரசு ஊழியர்களின் கார்டு. தமிழகம் முழுவதும் 2.05 கோடி பச்சை கார்டுகளுக்கு மாதந்தோறும் தலா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை ஏழைகள் சாப்பாட்டுக்கு மற்றும் இட்லி, தோசை மாவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சமூக விரோதிகள் சிலர் கூடுதல் விலைக்கு விற்க ரேஷன் அரிசியை பட்டை தீட்டி, வெளி மாநிலங்களுக்கும்

கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமாக இல்லை எனக்கூறி அதை விவசாயி ஒருவர் ரோட்டில் கொட்டி கண்டனம் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரோட்டில் ரேஷன் அரிசியை கொட்டியபடியே விவசாயி கூறுகையில், ‘‘ஏழைகள், அடித்தட்டு மக்கள் சமைத்து சாப்பிடத்தான் ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறது.

ஆனால் எனக்கு வழங்கப்பட்ட அரிசியை மனிதன் சமைத்து சாப்பிட முடியாது. குண்டரிசியாக உள்ளது. ஆடு, மாடாவது திங்கட்டும் என்று தான் ரோட்டில் கொட்டினேன். இனியாவது ரேஷனின் நல்ல அரிசி வழங்க வேண்டும்’’ என்றார். சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ஏற்கனவே 2.05 கோடி கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி தரமாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. தற்போது தகுதி வாய்ந்த சர்க்கரை கார்டுகளையும் அரிசி கார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. கூடுதல் பயனாளிகள் சேரும் போது அரிசியின் தரம் இன்னும் குறைய வாய்ப்புள்ளது. அதுபோல் இல்லாமல் அனைத்து பயனாளிகளுக்கும் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories: