ஒரே இரவில் நிரம்பிய நிலையில் மேடவாக்கம் ஏரியை உடைத்து ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

வேளச்சேரி: மேடவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் பெய்த மழையில் ஏரி நிரம்பியதால், தங்களுக்கு பாதிப்பு வரும் என கருதிய ஆக்கிரமிப்பாளர்கள், ஏரியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், சுற்றுப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வேளச்சேரி அடுத்துள்ள மேடவாக்கம் ஊராட்சியில் சித்தேரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேறுவதற்காக வேளச்சேரி பிரதான சாலையோரம் கலங்கல் இருந்தது. இந்த உபரி நீர் பள்ளிக்கரணை ஏரியில் கலக்கும் வகையில் கால்வாய் இருந்தது. இந்த கால்வாய் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள ஜெயா நகர், சூர்யா நகர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை மீட்டு கால்வாயை மீட்க வேண்டும், என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சித்தேரிக்கு நீர் வரத்து தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் ஏரி முழுவதுமாக நிறைந்தது. இதனால், ஏரி ஆக்கிரமிப்பு வீடுகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று மதகு அருகே உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். மதகு அருகே இருந்த கால்வாயும் ஆக்கிரமிப்பில் உள்ளதால், சூர்யா நகர், ஜெயா நகர் பகுதி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஜெயா நகர் பகுதியில் இருந்த அஞ்சலகத்தையும் தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து  மேடவாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் பாபு தலைமையில் ஊழியர்கள் வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கலங்கல் மற்றும் கால்வாய் ஆகியவை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனால், மழைக்காலங்களில் ஏரி உபரி தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஏரி தண்ணீர் கொள்ளளவு அதிகரிக்கும் போது கரை உடையும் அபாயம் உள்ளது. அதனால், இந்தப் பகுதியில் அச்சத்துடன் குடியிருக்க வேண்டிய நிலை உள்ளது. நேற்று மர்ம நபர்கள்   ஏரி கரையை உடைத்து விட்டதால் எங்கள் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: