தொகுதி வரையறை பணிகளை நிறைவு செய்ய வேண்டும்: உள்ளாட்சி தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு தாக்கல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3  ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதை எதிர்த்தும், உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடைசியாக  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது வருகிற டிசம்பர் 13ம் தேதி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்  என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்ற ஒரு கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம், பல்வேறு ஆரம்ப கட்ட பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது.  இதன் ஒரு  பகுதியாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று காலை 11.30 மணிக்கு சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, மார்க்சிய கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, திமுக சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன் தலைமையில்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சி  தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் வார்டுகளை பிரிப்பது, இடஒதுக்கீடுகள், வாக்காளர் பட்டியல் வெளியிடுவது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க  என்னென்ன வழிமுறைகள் என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, எந்தெந்த பதவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தலாம், எந்த  பதவிக்கு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசரச்சட்டம்  பிறப்பித்துள்ளார். நகர்புறங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், ஊரகப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு  வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்,  போன்றவைகளுக்கும் தேவை ஏற்பட்டால் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்திக் கொள்ளலாம் என சட்டத்திருத்தம் செய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொகுதி வரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: