×

நண்பரின் கொலைக்கு பழியாக சுடுகாட்டில் சபதம் எடுத்து அன்பு ரஜினியை தீர்த்து கட்டினோம்: ரவுடி சோழன் பரபரப்பு வாக்குமூலம்

புதுச்சேரி: நெருங்கிய நண்பர் வினோத் கொலைக்கு பழிவாங்குவதற்காக சுடுகாட்டில் சபதம் எடுத்து முத்தியால்பேட்டை ரவுடி அன்புரஜினியை தீர்த்துக் கட்டியதாக ரவுடி சோழன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி அன்புரஜினி (35), கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீராம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சோழன் தூண்டுதலின்பேரில் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, அன்பு ரஜினி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சோழன் சேர்க்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, புதுவை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காலாப்பட்டு சிறைக்கு சென்ற முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் சோழனை இவ்வழக்கில் முறைப்படி கைது செய்தனர். அதன்பிறகு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு செய்தனர். அப்போது 5 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி கேட்ட நிலையில் 2 நாள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து உடனே சோழனை காவலில் எடுத்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த ஜூலை மாதம் நடந்த தனது நண்பர் வினோத் கொலைக்கு பழிவாங்குவதற்காக அன்பு ரஜினியை தீர்த்துக் கட்டியதாக கூறியுள்ளார்.

தொடர் விசாரணையில் போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: புதுவை கூனிமேட்டை சேர்ந்த வினோத் எனக்கு நெருங்கிய நண்பர். நான் சொல்லும் வேலைகளை உடனே செய்து வந்தார். அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் வினோத்தை கடந்த ஜூலை மாதம் சிலர் கொன்று விட்டனர். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கூட்டாளிகளுடன் பங்கேற்றேன். அப்போது வினோத்தை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவோம் என சபதம் செய்தோம். அப்போது, வினோத்தை தீர்த்துக் கட்டியது யார்? என எங்களுக்கு சரிவர தெரியவில்லை. கொலையில் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகள் ஒவ்வொருவரையும் அன்பு ரஜினி ஜாமீனில் எடுத்தார். அப்போது விசாரித்ததில் வினோத் கொலையின் பின்னணியில் அன்பு ரஜினி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை கொல்வது என முடிவு செய்தோம்.

இதற்கான ஆட்களை நானே தேர்வு செய்தேன். அவர்கள் 2 மாதமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் சரியான சந்தர்ப்பம் வரவில்லை. இதற்கிடையே நான், சந்திரசேகர் கொலையில் கைதாகி சிறைக்கு சென்று விட்டேன். இருந்தாலும் என் உத்தரவின்படி அன்பு ரஜினியை சரியான சந்தர்ப்பம் பார்த்து தீர்த்து கட்டினர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, காவல் விசாரணை முடிந்து இன்று மீண்டும் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர். இதனிடையே இவ்வழக்கில் 3 வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ள சோழனின் உறவினரையும் தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. அவர் நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் மப்டி உடையில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : murder ,Rajini: Rowdy Cholan , Rowdy Cholan
× RELATED காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில்...