நாகர்கோவில்: குமரி மாவட்டம் சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை தங்களின் சொந்த மண்ணிலேயே விளைவித்து, ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டு வாழ்ந்து வந்தனர். மாவட்டத்தின் தனித்துவமான காலநிலை மற்றும் வளமான மண்ணிற்கு ஏற்ற பாரம்பரிய நாட்டு ரகக் காய்கறிகள் அன்றைய தினசரி உணவில் முக்கிய பங்கு வகித்தன. கத்தரி, வழுதனை, மிளகாய், வெள்ளரிக்காய், பூசணி, தடியன்காய், கிழங்கு வகைகள் என்று வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டங்கள் அமைத்திருந்தனர். நெல்சாகுபடியும் உண்டு.
இன்று தென்னை, வாழை என்று தோட்டக்கலை பயிர்கள் மட்டுமே சில பகுதிகளில் எஞ்சி நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. காய்கறி முதல் அன்றாட அரிசி வரை அனைத்திற்கும் அண்டை மாவட்டங்களையும், அண்டை மாநிலங்களையுமே நம்பியிருக்கின்ற நிலை உருவாகியுள்ளது. ஒரு நாள் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் கூட, குமரி மாவட்டத்தில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் இக்கட்டான சூழல் நிலவுகிறது. குமரி மாவட்டத்தில் வேலிகளில் வளர்க்கப்பட்டு வந்த கோவைக்காய் போன்றவை கிலோ ரூ.80 வரை விற்கின்ற நிலைமை மாறியுள்ளது. இதன் மோசமான விளைவாக, குமரி மாவட்ட மண்ணுக்கே உரிய பல பாரம்பரிய நாட்டு ரக காய்கறி வகைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. எஞ்சிய சில ரகங்களும் அழியும் விளிம்பில் உள்ளன.
தற்போதைய உலகளாவிய போர் சூழல்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் பதற்றமான நிலை காரணமாக, ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அண்மையில் அறிவுறுத்தியுள்ளார். போக்குவரத்து தடைப்பட்டால், மிக எளிதாக உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நமக்கு அதிகம் என்பதை உணர வேண்டிய தருணம் இது. நஞ்சில்லாத தூய்மையான உணவைப் பெறவும், உணவிற்காக அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலையை தவிர்க்கவும் ‘தற்சார்பு முறை’ மட்டுமே ஒரே தீர்வாகும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை, குறைந்தபட்சம் ஒரு சிறிய இடத்திலாவது இயற்கை முறையில் பயிரிட வேண்டும்.
போதிய இடவசதி இல்லாத நகர்ப்புற மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளை பயன்படுத்தி மாடித் தோட்டங்களை அமைக்கலாம். குமரி மாவட்டத்திற்கே உரிய தனித்துவமான நாட்டு ரக விதைகளை கண்டறிந்து, அவற்றை மீண்டும் பயிரிட்டு பெருக்க வேண்டும். குமரி மாவட்ட மண்ணின் செழுமையை மீட்டெடுப்போம், வீட்டுத் தோட்டம் அமைப்போம், தற்சார்பு கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு, குமரி மாவட்ட மக்கள் அனைவரும் தங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உடனே களமிறங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தனித்துவமான மண்வளம் மற்றும் காலநிலைக்கு ஏற்ற பல பாரம்பரிய நாட்டு ரகங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றை மீட்டெடுத்து வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதே முதல் கடமையாகும்.
ஐந்து அடுக்கு தோட்டம்
இடவசதி உள்ளவர்கள் ஒரே இடத்தில் பலதரப்பட்ட உணவுகளைப் பெற இந்த முறையைப் பயன்படுத்தலாம்:
அடுக்கு 1 (பூமிக்குக் கீழே) இஞ்சி, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகள்.
அடுக்கு 2 (தரைமட்டம்) புதினா, கொத்தமல்லி மற்றும் கீரைகள்.
அடுக்கு 3 (செடிகள்): தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்.
அடுக்கு 4 (புதர்கள்/சிறிய மரங்கள்): கறிவேப்பிலை, எலுமிச்சை மற்றும் பப்பாளி.
அடுக்கு 5 (கொடி வகைகள்): பாகற்காய், புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் (வேலிகளில் படரவிடலாம்).
நீர் மேலாண்மை மறுசுழற்சி: அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளைக் கழுவிய நீரைச் செல்லவிடாமல் சேகரித்துச் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இதில் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன.
மூடாக்கு: கோடைக் காலத்தில் செடிகளின் வேர் அருகில் காய்ந்த இலைகள் அல்லது தேங்காய் நார்களை பரப்புவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கலாம்.
இயற்கை பூச்சி விரட்டி வேப்ப எண்ணெய் கரைசல்: 1 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்ப எண்ணெய் மற்றும் சில துளிகள் காதி சோப் கரைசல் கலந்து செடிகளின் மீது தெளிப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலை தடுக்கலாம்.
இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல்: இவற்றை அரைத்துச் சாறு எடுத்து, தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
