கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள `தேர்தல் விழிப்புணர்வு மன்றம்’ அரசு பள்ளிகளில் தொடக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை பள்ளி மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் `தேர்தல்  விழிப்புணர்வு மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  கூறினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் என்ற பெயரில், வாக்காளர்களே தங்கள் பெயர், விலாசம் சரியாக இருக்கிறதா என்பதை வாக்காளர் பட்டியலை பார்த்து திருத்திக் கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி, செல்போன் செயலில் இதை பதிவிறக்கும் செய்து ஒரு கோடியே 78 லட்சம் பேர் சரிபார்த்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் 40 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மற்றவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்துள்ளனர்.

8 லட்சம் பேர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 6 கோடி வாக்காளர்களில் 99.4 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்துள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் 100 சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 94 சதவீதம் பேரும் பார்த்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை பள்ளி படிக்கும் வயதிலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், `தேர்தல் விழிப்புணர்வு மன்றம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ₹1000 வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 18 வயது முடிந்ததும் வாக்காளர் அடையாள அட்டை வாங்க வேண்டும், தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, பேச்சு, கவிதை, விளையாட்டு ேபாட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்று, 3 ஐஏஎஸ் அதிகாரிகள், கோட்டாட்சியர்கள் என 8 பேர் அடங்கிய குழுவுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்கியுள்ளது. அவர்கள் மாவட்ட வாரியாக, சட்டமன்ற தொகுதி வாரியாக ஆசிரியர்கள், பள்ளி மாணவர் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு மன்றம் நடத்துவார்கள். இந்த விழிப்புணர்வு முகாமில் தேர்தல் தொடர்பான சிறிய சிறிய வீடியோ காட்சிகளும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: