டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஆசிரியர் தேர்வு வாரிய கட்டிடத்தின் 6வது மாடியில் திடீர் தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி அலுவலகம் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் துறை வாரியாக கட்டிடங்கள் உள்ளது. 11 அடுக்குமாடி கொண்ட ஈ.வி.கே.சம்பத் மாளிகையின் 6வது மாடியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய கோப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 6வது மாடியில் திடீரென கரும் புகை வெளியேறியது. இதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உயிருக்கு பயந்து அலறி அடித்து கொண்டு வெளியேறினர். ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் வாகனமும் கொண்டு வந்தனர். பின்னர் வீரர்கள் உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பல ஆண்டுகளாக பராமரித்து வந்த முக்கிய கோப்புகள் பல எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இருந்தாலும் முக்கிய கோப்புகள் பராமரிக்கப்பட்டு வந்த பகுதி என்பதால் தீ விபத்தின் பின்னணியில் சதி ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் டிபிஐ வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

Related Stories: