தமிழகத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்: அரசு தீவிர நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் புற்றீசல்போல் பரவி வரும் போலி மருத்துவர்களை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 50 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். இதில் 18 ஆயிரத்து 70 அரசு மருத்துவர்கள் அடங்குவர். மருத்துவம் படித்தவர்கள் உள்பட நாடு முழுவதும் 10 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் நவீன கருவிகள்  உதவியுடன் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், தனியார் மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. இதுஒருபுறம் இருந்தாலும், கிராமப்புறங்களை குறிவைத்து தமிழகத்தில் செயல்படும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் உடனடியாக சிகிச்சை பெற முடிவது மற்றும் குறைந்த கட்டணம், வீட்டிற்கு ஊரிலேயே இருப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். குறைந்த கட்டணத்தில் நடந்து செல்லும் தொலைவில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதால் மக்கள்  போலியான டாக்டர்களா, உண்மையான டாக்டர்களா என்று பார்ப்பது இல்லை. மேலும் கிராமங்களை தேடிச் சென்று மருத்துவ சேவை அளிப்பதில் பெரும்பாலான மருத்துவர்கள் விரும்புவதில்லை. எனவே இதுவும் போலி மருத்துவர்கள்  அதிகரிக்க காரணமாக இயற்கையாகவே அமைந்துவிடுகிறது.போலி மருத்துவர்களை பொறுத்தவரை அவர்கள் மருத்துவர்களிடம் உதவியாளராகவோ அல்லது மருத்துவ துறையில் ஏதாவது சிறு பணிகளில் உள்ள அனுபவத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் சாதாரண  சளி, காய்ச்சல், வயிற்றுவலி, கால்வலி, தலை வலி ஆகியவற்றிற்கு அவர்கள் அளிக்கும் மருந்துகள் போதுமானவையாக உள்ளன.

அதே சமயம் ரத்த அழுத்தம், நீரிழிவு, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற ஆட்கொல்லி ேநாய்களின் தன்மை அறியாமல் அவற்றை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து இவர்கள் தரும் சிகிச்சை இறுதியில் மரணத்தின் வாயிலுக்கு  கொண்டு செல்கின்றன. கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய கடைசி நேரத்தில் இவர்கள் நோயாளிகளை அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கும்போது, அந்த உயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.  அப்போதுதான் அந்த போலி மருத்துவரின் கோர முகம் வெளிச்சத்துக்கு தெரியவருகிறது. அதற்குள் பல உயிர்கள் பலியாகிவிடுகிறது. மேலும் பலர் பக்கவிளைவுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், ஆயுஷ் மருத்துவ கவுன்சில் ஆகியவற்றில் முறையான பதிவு செய்தவர்கள் மட்டுமே மருத்துவ தொழிலை பார்க்கலாம். மற்றவர்கள் ஆங்கில சிகிச்சை முறையை செய்ய கூடாது.  அப்படி பார்த்தால் அவர்கள் போலி மருத்துவர்களாவே இருப்பார்கள். அந்த வகையில் ஆயிரக்கணக்கான கருக்கலைப்பு செய்ததாக ஒரு பெண்ணும் அவரது கணவரும் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டனர். இதற்காக ரகசிய அறையே அவர்கள் அமைத்திருந்தனர். மேலும், தேனி, விழுப்புரம், சென்னை,  திருவள்ளூர், திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல், பிரசவம் போன்றவற்றையும் போலி மருத்துவர்கள் கையாண்டாதாக அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:மருத்துவர்கள் குறைந்தது எம்.பி.பி.எஸ் அல்லது அதற்கு மேலே படித்திருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் எந்தவித படிப்பையும் பயிலாமல், டாக்டர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், வேறு துறையில் பணியாற்றக்கூடியவர்கள்  மருத்துவம் செய்வதை போலி மருத்துவம்  என்கிறோம். போலி மருத்துவர்களால் அளிக்கப்படும் சிகிச்சை மக்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். போலி மருத்துவம் மக்களுக்கு எதிரான செயல். இதை தடுக்க முறையான சட்டங்கள் உள்ளது. போலி மருத்துவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு   அபராதத்தொகை மற்றும் தண்டனை விதிக்கப்படும். தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வரும் போலி மருத்துவர்கள் மறுபடியும் இதே போலி மருத்துவத்தில் ஈடுபடுகிறார்கள். தற்போது, கிராமப்புறங்களில் நவீன மருத்துவம் மிகவும்  குறைவாக உள்ளது. இதை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாதது, கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாதது, வேலையில்லா திண்டாட்டம், நவீன அறிவியல் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு உள்ளிட்டவைகளே இதுபோன்ற போலி  மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கக்கூடிய வகையில் தரமான மருத்துவ கட்டமைப்பு வசதியை இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில  அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதுவே போலி மருத்துவத்தை ஒழிக்கும். இவ்வாறு கூறினார். தமிழகத்தில் 2016ம் ஆண்டு 162 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,513 போலி மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களை கண்காணித்து கைது செய்யும் பொருட்டு  அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட குழு தீவிர ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில்  கோரிக்கை எழுதுள்ளது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு 162 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,513 போலி மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: