திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே பழுதடைந்த மின் டிரான்ஸ்பார்மர்: உடனே சீரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர் :திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே பழுதடைந்த நிலையில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அது எப்போது விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே கேசிபி சாலையில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் வீடுகளுக்கு செல்லக்கூடிய மின்சாரம் இந்த பில்லரில் இருந்து கட்டுப்படுத்தி தேவைக்கேற்றபடி மாற்றி பயன்படுத்தப்படுகிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள சிமென்ட் கம்பங்கள் பல நாட்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் சற்று வேகமாக காற்றடித்தால் கூட இந்த கம்பங்கள் முறிந்து பொதுமக்கள் மீது விழும் அபாயம் உள்ளது.

பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எர்ணாவூர் மின்வாரிய உதவி பொறியாளருக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல கூடியவர்கள் பீதியுடன் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் இந்த ேசதமடைந்த மின் டிரான்ஸ்பார்மருக்கு அருகில் திருவொற்றியூர் ரயில் நிலையம் இருப்பதால் பல சமயங்களில் கூட்டம் கூட்டமாக பயணிகள் இறங்கி இந்த ஆபத்தான மின் டிரான்ஸ்பார்மரை கடந்துதான் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் போது காற்றின் வேகம் காரணமாக மின் டிரான்ஸ்பார்மர் முறிந்து கீழே விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக பழுதடைந்த இந்த  மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: