கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி MP ஜோதிமணி, MLA செந்தில்பாலாஜி உண்ணாவிரத போராட்டம்

கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு  செய்யப்பட்ட திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் என 1000-க்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதற்கிடையே, திருச்சி, மணப்பாறை, தாந்தோணிமலை, பாளையம், தோகைமலை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர் வழியாக அமராவதி ஆற்றுப்பாலத்தை கடந்து நகருக்குள் சென்று  வருகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் இதன் வழியாக செல்கிறது. இந்நிலையில், திருமாநிலையூர் பகுதியில் அனைத்து வாகனங்களும் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லும் வகையில்,  திருமாநிலையூர் ரவுண்டானா அருகே நிழற்குடை அமைக்கப்பட்ட நிறுத்தம் உள்ளது.

கரூரை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த இடத்தில் நின்றுதான் பயணிகளை இறக்கி செல்ல வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, திருமாநிலையூர் கடைவீதியில், ராயனூர், ஈசநத்தம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு சாலை  பிரியும் இடத்தின் அருகே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்களும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.

தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் பெரும்பாலான பேருந்துகள் இந்த இடத்தில் நிறுத்தி செல்வதால், பின்னால் வரும் வாகனங்கள் முன்னேறி செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் முதல் அனைத்து  தரப்பினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல், கடைவீதி முன்பு நிறுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும்,  பெரும்பாலான பேருந்துகள் அனைத்தும் கடைவீதி முன்பாகவே நிறுத்தப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து, அனைத்து பேருந்துகளும், நிழற்குடை அருகே நின்று செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள  வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: