வாரிசு சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது

சென்னை: வாரிசு சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (38). இவர், தனது சகோதரிக்கு வாரிசு சான்றிதழ் பெற, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தை அணுகினார். அங்கு தாசில்தார் சுப்பிரமணியனிடம் வாரிசு சான்றிதழ் வழங்க கோரி மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், முக்கியமான ஆவணம் இணைக்கவில்லை. எனவே, அந்த ஆவணத்தை கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறியுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன், வாரிசு சான்றிதழ் அவசரம் என்பதால், இருக்கும் ஆவணங்களை பரிசீலனை செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு தாசில்தார், அப்படி என்றால் 25 ஆயிரம் கொடுத்தால் உடனே உங்கள் சகோதரிக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். பின்னர் வேறு வழியின்றி முதல் தவனையாக 10 ஆயிரம் தருகிறேன். மீதமுள்ள 15 ஆயிரத்தை வாரிசு சான்று வாங்கும் போது தருகிறேன் என்று ரவிச்சத்திரன் உறுதியளித்துள்ளார்.

வாரிசு சான்று பெறுவதற்கான அனைத்து ஆவணங்களும் முறையாக மனுவுடன் கொடுத்தும், பணம் பெறும் நோக்கில் முக்கிய ஆவணம் ஒன்று இல்லை என்று கூறி 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாசில்தார் சுப்பிரமணியன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 10 ஆயிரத்தை ரவிச்சந்திரன் தனது சகோதரியுடன் ேநற்று மதியம் மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியனை, அவரது அலுவலகத்தில் உள்ள அறையில் சந்தித்து கொடுத்தனர். அப்போது திட்டமிட்டப்படி பொதுமக்கள் போல் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக தாசில்தார் அறைக்குள் புகுந்து 10 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சுப்பிரமணியனை கைது செய்தனர். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் அறை முழுவதும் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் முன்னிலையில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: