சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிக்கு 25 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

சென்னை:  சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய நீர்நிலைகளில் சிட்லப்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதி மக்களின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பளவு 47 ஏக்கராக சுருங்கி காணப்படுகிறது. மேலும், வீடுகளின் கழிவுநீர் ஏரியில் விடப்படுவதால் தற்போது ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சிட்லப்பாக்கம் ஏரியில் 25 கோடி செலவில் புனரமைப்பு பணி ேமற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது இப்பணிக்கு 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில், சிட்லப்பாக்கம் ஏரி 219 ஏக்கர் விவசாய நிலங்களை ஆயக்கட்டை பரப்பாக கொண்டு உள்ளது. இந்த ஏரியில் புனரமைப்பு பணி மேற்கொள்ளும் வகையில்  முதற்கட்டமாக ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. தொடர்ந்து மணல் திட்டுகளால் கொள்ளளவு குறைந்துள்ள ஏரியின் 7.02 மில்லியின் கனஅடி கொள்ளளவு மீட்கப்பட உள்ளது. ஏரி கரைகள் பலப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து உபரி நீர் வீணாவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. வெள்ள நீர் வடிகால்வாய்கள் மூலம் திருப்பி விடப்படுகிறது. ஏரிக்கு கழிவுநீர் வருவதை தடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2 ஆண்டுகளில் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் முடிந்த பிறகு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தேவைக்கு இந்த ஏரி நீர் பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>