மேற்படிப்பு, பயிற்சி மருத்துவர்களுக்கு சரியான பணி நேரம் வகுக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் ரவீந்திரநாத் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், 24 மணி நேரம் பணியமர்த்தப்பட்டு வந்தனர்.  மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, 8 மணி நேர பணி நிர்ணயித்து தமிழக அரசு கடந்த 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களை கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்துவது மட்டுமல்லாமல், பிற பணிகளைச் செய்யவும் நிர்ப்பந்திக்கிறார்கள் .  எனவே, 8 மணி நேர பணி செய்யும் வகையில் அவர்களுக்கான பணி நேரத்தை அமல்படுத்துமாறும், அரசு மருத்துவர்கள் பிற பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கவும் உயர் மட்ட குழுவை அமைக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவக் கல்வி இயக்குநர் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மதியம் தள்ளிவைத்தனர்.

வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக் கல்வி துணை இயக்குநர் இந்துமதி ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் 8 மணி நேரம் பணியாற்றும் அறிவிப்பாணை நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும், மருத்துவ பணி உன்னதமான பணி என்பதால் பல மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து ஒரு சரியான நடைமுறையை எடுக்க உள்ளோம். இது குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.  இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>