தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம்: விமான நிலையத்தில் கமல்ஹாசன்- ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: நானும், ரஜினியும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை என நடிகர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து தனி விமானத்தில் நேற்று மாலை 6.15 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நானும், ரஜினிகாந்தும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏன் என்றால் கடந்த 44 ஆண்டுகளாக நாங்கள் இணைந்து தான் பயணித்து கொண்டிருக்கிறோம். அரசியலில் இணைய வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக இணைவோம். தற்போது வேலை தான் முக்கியம். பேசிக்கொண்டிருப்பதால் பலன் கிடைக்காது. நாங்கள் அரசியலில் சேர்ந்து பயணிப்பது என்பது தமிழகத்தின் மேம்பாட்டுக்காக பயணிக்க வேண்டிய நிலை வந்தால் நிச்சயம் பயணிப்போம். நாங்கள் சேர்ந்து பயணிக்கும் போது எங்கள் இருவருடைய கொள்கைகள் ஒத்து போகுமா என்பது பற்றி எல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம்.

ஏன் என்றால் அதற்கு நேரம் இருக்கிறது. இப்போது அதைப்பற்றி பேச வேண்டியது இல்லை. இலங்கையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தலைவராக இருக்க வேண்டும் என நினைத்தால் நியாயமான ஒரு ஆட்சியை கொடுக்க வேண்டியது அவருடைய கடமை. இது அந்த நாட்டு மக்களின் தீர்ப்பு. இங்கேயும் சில முறை அதைப்போல் நடந்துள்ளது. என்னுடைய விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் எடப்பாடியை பற்றி கூறியது விமர்சனம் அல்ல. நிதர்சனம். அது உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் கூறினார்.  சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நடிகர் கமல்ஹாசன் சற்று முன்பு அளித்த பேட்டியில் அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என்று கூறியுள்ளாரே. மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம். முதலமைச்சர் பற்றி நீங்கள் கூறிய கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளாரே. ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: