காவலர்களின் சீருடையால் மாநிலங்களவையில் பரபரப்பு: சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை...வெங்கையா நாயுடு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையும்  தொடங்கியது. நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் மாநிலங்களவைவின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த மாநிலங்களவை, நேற்று 250-வது கூட்டத்தொடரை   எட்டியது. இதனை முன்னிட்டு, மாநிலங்களவை குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 249 கூட்டத் தொடர்களை நிறைவு செய்துள்ள மாநிலங்களவையில் இதுவரை 3817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 60  மசோதாக்கள் பல்வேறு காரணங்களால் மக்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகின.

1952-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது முதல் இதுவரை 3,818 சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 118 பக்கங்களை கொண்ட இந்த நினைவு மலரில் ராஜ்யசபாவின் வரலாறு, சமூக மாற்றம்,  பொருளாதார மாற்றம், தொழில்துறை வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு  ஆகியவற்றில் ராஜ்யசபாவின் பங்கு, அவையில் நிறைவேற்றபட்ட முக்கிய சட்டங்கள், ராஜ்யசபா செயல்பாடுகள்  உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, நேற்று மாநிலங்களவைக்கு சென்ற எம்.பி.க்கள் அனைவரது முகத்திலும் வெறுப்பு காணப்பட்டது. ஏனென்றால், மாநிலங்களவை தலைவருக்கு அருகே நிற்கும் மார்ஷல்கள் வழக்கமாக இந்தியப் பாரம்பரிய குர்தா உடையிலும்,  தலையில் தலைப்பாகையும் கட்டி இருப்பார்கள். இதுதான் நீண்டகாலமாக அவர்களின் சீருடையாக இருந்து வந்தது. ஆனால், நேற்று காலை அவர்களின் சீருடை மாற்றப்பட்டு, ராணுவப் பச்சை(ஆலிவ் கிரீன்) ராணுவ உடை போன்ற தோற்றத்தில்  சீருடையும், தலையில் தொப்பியும் வழங்கப்பட்டு சீருடை முற்றிலும் மாற்றப்பட்டு இருந்தது. மாநிலங்களவை இந்த ஆண்டுடன் 250-வது கூட்டத் தொடரை நிறைவு செய்கிறது. இதையொட்டி மார்ஷல்கள் சீருடை மாற்றப்பட்டு இருக்கலாம்  என்று தகவல்கள் தெரிவிக்கபட்டது. இதற்கு பல்வேறு கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். பல்வேறு பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர் மாநிலங்களவை செயலகம் மார்ஷல்களுக்கான புதிய ஆடை வடிவமைப்பு கொண்டு வந்தது. ஆனால் சில அரசியல் மற்றும் நல்ல நபர்களால் நாங்கள் சில அவதானிப்புகளைப் பெற்றுள்ளோம். இதை மறுபரிசீலனை செய்ய செயலகத்தை கேட்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார்.

மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றம் தொடர்பாக விவாதிக்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு சீருடை பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று வெங்கையா கருத்து தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தை அடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: