கேரளா மாணவி தற்கொலை விவகாரம் சூடுபிடிக்கிறது 3 ஐஐடி பேராசிரியர்களிடம் கூடுதல் கமிஷனர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை: முக்கிய தகவல்களை வாக்குமூலமாக பெற்றதாக தகவல்

சென்னை: கேரளா மாணவி தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார். அவர்களிடம் வழக்கிற்கான முக்கிய தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்தாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப்(18) என்ற மாணவி எம்ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், பாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் மாணவியின் பெற்றோர் முறையாக விசாரணை நடைபெறவில்லை இந்த தற்கொலையில் மர்மம் உள்ளது என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தற்கொலைக்கு காரணமாக ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பர் மீது தனது மகள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டினார்.  அதன்படி, மாணவி தற்கொலை விவகாரம் விஸ்வரூபன் எடுத்ததால் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த வியாழக்கிழமை ஐஐடிக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல மர்மங்கள் இருந்ததால் மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு கமிஷனர் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மெகாலினா ஆகியோர் பாத்திமா லத்தீப் உடன் விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் மற்றும் விடுதி ஊழிர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் மாணவி பாத்திமா லத்தீப் பயன்படுத்திய செல்போனை தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மாணவி குற்றம் சாட்டிய பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், உதவி பேராசிரியர்கள் ஹேமசந்திரன் காரா, மிலிந்த் பிராமே ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி ரகசிய இடத்தில் வைத்து காலை முதல் 3 பேராசிரியர்களிடமும் மாணவியின் செல்போனில் வைத்திருந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த ஓராண்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட 6 மாணவிகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையின் போது, 3 பேராசிரியர்களும் அளித்த பதிலை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். 3 பேராசிரியர்களும் அளித்த வாக்குமூலம் குறித்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இந்த ரகசிய விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. மாணவி தற்கொலை நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பட்டுள்ளதால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை கவனமாக கையாண்டு வருகின்றனர்.

Related Stories: