கீழ்கட்டளை பகுதியில் சாலையோரம் ஆபத்தான தரை கிணறு: பொதுமக்கள் அச்சம்

ஆலந்தூர்: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை பிரதான சாலை - கலைவாணி தெரு சந்திப்பில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத தரை கிணறு ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்த கிணறு அந்த பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது.

இதனை சரிவர பராமரிக்காததால் பயனற்று பாழ்பட்டு காணப்படுகிறது. சாலை மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரமே கொண்ட இந்த தரை கிணற்றின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனால், அந்த பகுதி வாய் பிளந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த கிணற்றில் இரும்பு கம்பிவலை போட்டுள்ளது. இது தற்போது துருபிடித்து வலுவிழந்து காணப்படுகிறது.

இந்த பகுதி வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், வயதானவர்கள்  தினந்தோறும் நடந்து செல்கிறார்கள். சைக்கிள் மற்றும் பைக்கில் செல்பவர்கள் மற்றும் கால்நடைகள் இதனை ஒட்டிச் செல்பவர்கள் கிணற்றுக்குள் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்துடன் செல்கின்றனர். பகலில் இந்த நிலை என்றால் இரவில் சொல்லவே வேண்டாம். இது போன்ற ஆபத்தான தரை கிணறுகள், போர்வெல் போன்றவை மூடப்பட்ட நிலையில் இந்த தரை கிணறு   அதிகாரிகளின் கண்களில் படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. பல்லாவரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த கிணற்றினை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: