ஆவடி மாநகராட்சியில் 1.52 கோடி மதிப்பில் பூங்கா சுகாதார நிலையங்கள் திறப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் 1.52 கோடியில் பூங்கா மற்றும் சுகாதார நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை, மிட்டனமல்லி ஆகிய பகுதிகளில் 1.05 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.  மருத்துவர் அறை,  பிரசவத்திற்கு பிறகு ஓய்வு எடுக்கும் அறை, மருந்துகள் வைப்பு அறை, நோய் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை அறை, மருந்தகம் அறை, ஆய்வகம், ஊசி போடும் அறை மற்றும் பொது அறை ஆகியவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

தாய் சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் நலம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பராமரிப்பு, குடும்பநலம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, சிறு நோய்களுக்கான சிகிச்சை, தொற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த புதிய கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். ஆவடி  தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான பாண்டியராஜன்

ஆரம்ப சுகாதார நிலைய  கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதேபோல், ஆவடி மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகரில் 1.46 கோடியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 900 மீட்டர் நீள நடைபாதை,  

குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், 1020 மீட்டர் சதுர  மீட்டருக்கு பசுமை தோட்டம், இருக்கைகள், மின்விளக்குகள்  உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். விழாவில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாச்சியர் வித்யா, மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர்கள் சங்கர், சத்தியசீலன்  கலந்து கொண்டனர்.

Related Stories: