கோவாவில் மிக் -29 கே ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது : 2 விமானிகள் உயிர் தப்பினர்

பனாஜி: கோவாவில் மிக் -29 கே ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட 2 விமானிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.  இந்திய கடற்படையில் மிக்29 ரக போர் விமானங்கள் இருக்கின்றன. இவை ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் நிறுத்தப்பட்டு, போரில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா என்ற இந்தியக் கடற்படைத் தளத்தில் இருந்து மிக்29 ரகத்தைச் சேர்ந்த மிக் -29 கே போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயிற்சி விமானிகள் இருவர் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே வெர்னா பகுதியில் விமானம் பறந்தபோது கட்டுபாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.விமானத்தின் எஞ்சின் தீப்பற்றி எரிந்ததால் வெர்னா தேவாலயம் அருகே விமானம் தரையை நோக்கி பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், விமானத்தை தரையில் மோதாமல் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. ஆனால் விமானத்தை இயக்கிய கேப்டன் எம் ஷியோகண்ட் மற்றும் லெப் சி.டி.ஆர் தீபக் யாதவ் ஆகிய விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்திய கடற்படை மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் விமான பாகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

Related Stories: