போலீஸ் ஸ்டேஷனில் கைதியை சுட்டுக் கொன்ற எஸ்ஐக்கு ஆயுள்தண்டனை: ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது (24). டூவீலர் மெக்கானிக்கான  இவர் மீது, ஒருவர் திருட்டு புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் கடந்த 14.10.2014 அன்று காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் (36), செய்யது முகம்மதுவை தாக்கியும், தனது துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தார்.இதுதொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதை ஏற்று வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதன்படி ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, காளிதாஸ் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.  தற்போது காளிதாஸ் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.வழக்கின் விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் வழக்கை விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், செய்யது முகம்மதுவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories:

>