கேரள மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் சென்னை ஐஐடி பேராசிரியர்களுக்கு தொடர்பு முதல்வர் எடப்பாடிக்கு கேரள முதல்வர் கடிதம்

சென்னை: கேரள மாணவி தற்கொலையில் திடீர் திருப்பமாக, சென்னை ஐஐடி பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கேரள முதல்வரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளர். அந்த புகார் மனுவை கேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினார். கடந்த சனிக்கிழமை இவர் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலை ெசய்து கொண்டதாக தெரிவித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் மாணவியின் செல்போன் நோட்ஸ் பகுதியில் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதி வைத்திருந்தது தெரிந்தது. ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என அதில் இருந்தது. மேலும் 4 பேராசிரியர்களின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முழு விசாரணை நடத்த கோரியும் கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதல்வரிடம் அளித்த அந்த புகாரில், ‘என் மகள் ஐஐடி நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்வானவர். அவர் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறுவது ஏற்புடையது அல்ல. எனது மகள் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது முறையாக விசாரணை நடத்தி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதைதொடர்ந்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனன் தலைமையிலான போலீசார் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தின்படி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஐஐடி பேராசிரியர்கள் 4 பேர் சிக்கியுள்ளனர்.

ஐஐடி முன் போராட்டம்

சென்னை ஐஐடி முன்பு நேற்று மாலை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் மத ரீதியாக பல தொல்லைகள் இருப்பதாகவும், மாணவியின் தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் ஐஐடி முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: