தென்காசி மாவட்டம் 22ம் தேதி துவக்கம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தை வரும் 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.  நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி புதிய மாவட்டம் உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி நெல்லை  மாவட்டத்தில் இருந்த 16 தாலுகாக்களை நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்கள், தென்காசி புதிய மாவட்டத்தில் 8 தாலுகாக்கள் என சமமாக பிரித்து தமிழக அரசு நேற்று முன்தினம் (12ம் தேதி) அரசு ஆணை வெளியிட்டது. புதிய மாவட்டம்  பிரிப்பு நேற்று முன்தினம் (12ம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.  தென்காசி புதிய மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு யார், யாருக்கு விருப்பம் என வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த  நவ.5ம் தேதி வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வருவாய் துறையை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அந்தந்த கலெக்டர்கள் அதிகார வரம்பில் பணியிட மாற்றம் செய்யப்படுவர். துணை கலெக்டர்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய நியமனங்கள் அந்தந்த துறையின் செயலாளரால் நியமனம் செய்யப்படும்.

எனவே தென்காசி புதிய மாவட்டத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தவர்கள் பட்டியலுடன் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் குழுவினருடன் சென்னை சென்றுள்ளார். அவரது அறிக்கையை பரிசீலித்தபின் ஊழியர்கள்  நியமனம் தொடர்பாக ஆணை வெளியிடப்படும் என தெரிகிறது. புதிய எஸ்பி நியமனம் குறித்து தமிழக உள்துறை செயலாளர் ஆணை பிறப்பிப்பார். இதற்கிடையே தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி வருகிற 22ம் தேதி தென்காசி வருகிறார்.

Related Stories: