×

குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் முடிவு? வெளியில் கசிந்த ரகசிய தகவல்!

இஸ்லாமாபாத்: குல்பூஷண் ஜாதவ் சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக, ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியு]ள்ளது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(49), கடந்த 2017ம் ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தியது பாகிஸ்தான். அவருக்கு இந்திய தூதரக உதவிகள் கிடைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதில், வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் குவாவி அகமது யூசப் தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடி தீர்ப்பு அளித்தனர். அதுமட்டுமல்லாது, வியன்னா விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியுள்ளது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு இந்தியாவின் தூதரக உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும். குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பாகிஸ்தான் கட்டாயம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், எனவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசும் விரைவில் தனது ராணுவச் சட்டத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு செய்யப்பட்டால் குல்பூஷண் ஜாதவ் ஒரு சிவில் நீதிமன்றத்தில் தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pakistan ,Gulbhushan Jadhav ,court ,Kulbhushan Jadhav , Kulbhushan Jadhav, Civil Court, Appeal, Army Act, Pakistan Government
× RELATED பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை:...