கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தி சரயு நதிக்கரையில் குவிந்த பக்தர்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பலத்த பாதுகாப்பு

அயோத்தி: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடினர்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. தீர்ப்பையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பு தற்போதும் நீடிக்கிறது. இந்நிலையில், அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு அங்கு முதல் முறையாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் கார்த்திகை பூர்ணிமா விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தீபாவளி முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு கார்த்திகை பூர்ணிமா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவையொட்டி நேற்று அயோத்தியில் 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், அதிகாலை முதலே சரயு நதிக்கரையில் புனித நீராடினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் விழா என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நதிக்கரையை ஒட்டி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். அனைத்து தெருக்களிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று மாலை 6.40 மணி வரை புனித நீராட உகந்த நேரம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சரயு நதிக்கரைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

‘சீதா, ராமா’ என்ற கோஷத்துடன் அவர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.

ராமர் கோயிலில் இலவச உணவு

பீகாரின் பாட்னாவில் உள்ள மகாவீர் மந்திர் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தை சுற்றிப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு விரைவில் இலவச உணவு வழங்க உள்ளது. அயோத்தியில் நிலைமை சீரானதும், அங்கு சமூக உணவுகூடம் கட்டும் பணியை தொடங்க இருக்கிறது. இங்கு உணவுடன், பாட்னா அனுமன் கோயில் பிரசாதமான ரகுபதி லட்டுவும் வழங்கப்பட இருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் கூறி உள்ளனர். மேலும், ராமர் கோயில் கட்டுவதற்காக இந்த அமைப்பு ₹10 கோடி நிதி வழங்க உள்ளது.

Related Stories: