கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த வாலிபர் விஷவாயு தாக்கி பலி: சகோதரனை கடைசி வரை போராடி காப்பாற்றி உயிரை விட்ட அண்ணன்

* வணிக வளாகத்தின் மீது வழக்கு பதிவு

சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தொட்டிக்குள் மயங்கிய சகோதரனை கடைசி மூச்சு உள்ள வரை போராடி காப்பாற்றிய அண்ணன் தன் உயிரை விட்ட சம்பவம் வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஸ்அவுஸ் அனுமந்தபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு அருண்குமார் (25) மற்றும் ரஞ்சித்குமார் (23) என்ற இரண்டு மகன்கள். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். அதேநேரம் ஓய்வு நேரங்களில் பல இடங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்.

அதன்படி ராயப்ேபட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர் அகற்ற தண்டபாணி ஒப்பந்தம் எடுத்துள்ளார். அந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று அதிகாலை அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், நாத் ஆகிய 5 பேரை அழைத்து சென்றுள்ளார். வணிக வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ரஞ்சித்குமார் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தொட்டியில் இருந்த விஷ வாயு தாக்கியது. இதில் ரஞ்சித் குமார் மயங்கி விழுந்தார். இதை பார்த்து மேலே இருந்த அவரது அண்ணன் அருண்குமார், தம்பியை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் உள்ளே செல்ல வேண்டாம். தீயணைப்பு வீரர்கள் வரட்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், தம்பி உயிருக்கு போராடுவதை பார்த்து அருண்குமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மயங்கி கிடந்த ரஞ்சித்குமாரை தோளில் தூக்கிக்கொண்டு மேலே வந்தார். அப்போது மேலே இருந்த நபர்கள் ரஞ்சித் குமாரை மீட்டனர். ஆனால் அருண்குமார் அதிக நேரம் மூச்சுப்பிடிக்க முடியாமல் திணறி விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனது தம்பியை கடைசி மூச்சு வரை விடாமல் காப்பாற்றி விட்டு அண்ணன் அருண்குமார் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய ரஞ்சித்குமாரை மீட்டு ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் உயிரிழந்த அருண்குமார் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வணிக வளாகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த அருண் குமார் உடலை அவரது பெற்றோர் பார்த்து அழுதது கண்ணீரை வர வைத்தது. இதுகுறித்து அண்ணா சாலை போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்க வைத்த தண்டபாணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஞ்சித்குமார் அளித்த புகாரின்படி வணிக வளாகத்தின் மீதும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வணிக வளாகத்தில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Related Stories: