பொதுப்பணித்துறை பணிகளின் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி நவ.15ல் இன்ஜினியர்களுடன் ஆலோசனை

சென்னை: பொதுப்பணித்துறையில் நடக்கும் பணிகளின் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவ.15ல் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் நூற்றுக்கணக்கான கட்டுமான பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு இருப்பதால், பணிகளை முடுக்கிவிட அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நவம்பர் 15ம் தேதி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அரசு செயலாளர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1513 பணிகளில் 600க்கும் மேற்பட்ட பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. நீர்வளநிலவள திட்டப்பணிகளின் காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது வரை ஏரிகள் புனரமைப்பு பணி முடியவில்லை. எனவே, அடுத்த கட்ட பணிக்கு நிதியுதவி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று புதிதாக 100 தடுப்பணைகள் அமைக்கும் பணிகளில் பெரும்பாலானவை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு 5 ஆயிரம் ஏரிகள் புனரமைப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடிமராமத்து திட்ட பணிகளை வடகிழக்கு பருவமழைக்குள் முடிக்கா விட்டால் பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி எச்சரித்து இருந்தார். ஆனால், குடிமராமத்து திட்டபணிகள் பாதி கூட முடிவடையாமல் உள்ளது. எனவே, வரும் 15ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திட்ட பணிகளை தொடங்க முடியாததற்கு என்ன காரணம் கூறுவது என்பது தெரியாமல் பொறியாளர்கள் விழிபுதுங்கி நிற்கின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு பொதுப்பணித்துறையில் பெரிய அளவில் பொறியாளர்கள் பணியிட மாற்றம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: