சென்னை உட்பட பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் பிரச்னையால் பதிவு நிறுத்தம்

சென்னை:  சென்னையில் நேற்று 60 உட்பட திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள 150 சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சர்வர் பிரச்னை ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பேரம்பாக்கம், மாதவரம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகங்களில் விரல் ரேகை பதிவு வேலை செய்யவில்லை. அசோக் நகர், பம்மல், குன்றத்தூர், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் இணையதள பக்கத்தில் உள்ளே செல்ல முடியாததால் பத்திர பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பதிவுக்கு வந்த பொதுமக்கள் பலர் பல மணி நேரம் காத்து இருந்தனர்.

இது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் சார்பதிவாளர்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4.15 மணி வரை பத்திரம் பதிவு முற்றிலும் முடங்கி போனது. நேற்று வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை என்பதால் பதிவுக்கு வந்த பலர் காத்திருந்தனர். அதன்பிறகு ஐஜி அலுவலகத்துக்கு புகார் அளித்தனர். இதைதொடர்ந்து 4.15 மணிக்கு பிறகு சர்வர் பிரச்சனை சரி செய்யப்பட்டது. அதன் பிறகு காத்திருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக பத்திரம் பதிவு செய்து விட்டு சென்றனர். சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: