தீதத்தாபுரத்தில் ரூ.17.65 லட்சத்தில் புதிய பாலம்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

உடன்குடி: உடன்குடி அருகே தீதத்தாபுரம் சாலையில் தொகுதி மேம்பாடு திட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன்குடி யூனியன் ஆதியாக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தீதத்தாபுரத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலைக்கு சென்று வெளியூர்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் தரைபாலம் இருந்தது. மழை காலங்களில் தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்லும் போது போக்குவரத்து துண்டிக்கப்படும்.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அனிதா ராதாகிருஷ்ணன்  எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.17.65லட்சம் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.

தற்போது பாலப்பணி நிறைவு பெற்றைதையடுத்து அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலசிங் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவபிரகாஷ், உடன்குடி நகர செயலாளர் ஜாண்பாஸ்கர், ஊராட்சி செயலாளர்கள் பரமன்குறிச்சி இளங்கோ, மாதவன்குறிச்சி கனகராஜ், மாதவன்குறிச்சி கூட்டுறவு சங்க தலைவர் அருள்செல்வன், கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் வைரவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய பாலத்தை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அனிதாராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட துணைஅமைப்பாளர்கள் மகளிரணி தொண்டரணி விஜயா, மருத்துவஅணி பாலசிங்பாண்டியன், சிறுபான்மை பிரிவு துணைஅமைப்பாளர்கள் ஷேக்முகமது, மெராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சலீம், மகபூப், உடன்குடி நகர பொருளாளர் தங்கம், அவைத்தலைவர் திரவியம், குலசை பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் கொம்பையா, நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், ஒன்றிய மாணவரணி பாய்ஸ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிபொன்ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: