காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை : காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின் படி,

இன்று ஆலந்தூரில் 237(காற்றின் தர குறியீடு), வேளச்சேரியில் 256, மணலி 128 என ஒவ்வொரு பகுதிகளிலும் காற்று மாசு அதிகமாக நிலவி வருகிறது. இருப்பினும் காற்றின் தர குறியீடு 50க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்றதாக கருதப்படும்.

இந்நிலையில் சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் காற்று மாசு குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா என கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  பேசியது பின்வருமாறு..

*கடந்த வாரம் சென்னையில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் போல் தென்பட்டது. வழக்கத்தை விட சென்னையில் மேகமூட்டம் கீழே இறங்கி காணப்பட்டது.

*சென்னையில் சில நாட்களாக கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது

*வாகனப் புகை, தொழிற்சாலைகளின் புகை காரணமாகவும் அதிகாலையில் காற்று மாசு காணப்பட்டது.  

*தமிழகத்தில் மொத்தம் உள்ள 28 இடங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே காற்றின் தரம் மோசம் என பதிவானது.

*ஒரு சில இடங்களில் காற்று மாசு அடைந்ததற்கான காரணம் புல் புல் புயலின் தாக்கம் தான்.  

*சென்னையில் மட்டும் காற்றின் தரத்தை அறிய 8 நிலையங்கள் உள்ளன.

*சென்னையில் ஒட்டு மொத்தமாக காற்று மாசு அதிகரிக்கவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் தான் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் ஆராயப்படும்.

*காற்று மாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை;

*பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாகவே சிலர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

*சென்னையில் காற்று மாசு என பரப்பப்படும் கதை வசனத்தை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

*காற்று மாசு தொடர்பாக சமூக வலைதளங்களில் ப‌ரப்ப‌ப்படும் தகவல்களை நம்பவேண்டாம்

*காற்று மாசு குறித்து சென்னை மக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவையில்லை.

இவற்றை தமது பேட்டியில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Stories: