கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாவோயிஸ்ட் தீபக் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவை: கோவையில் சிக்கிய மாவோயிஸ்ட் தீபக் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடம் எந்த தகவலையும் பெற முடியவில்லை.கோவை ஆனைகட்டி மூலகங்கன் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எப்) சோதனையில் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவர் கேரள மாநிலம் மஞ்சகண்டி வனப்பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில்  இருந்து தப்பிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (32) என தெரியவந்தது. இவரை சிறப்பு அதிரடிப்படை போலீசார், தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா), தேச  துரோகம், தீவிரவாதத்திற்கு உதவுதல், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருத்தல், அசம்பாவித செயல்களுக்கு திட்டமிடல் உள்ளிட்ட 7 பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தீபக் வசமிருந்து ஒயர், ஜெலட்டின், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபக்கின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார். நேற்று மதியத்தில் இருந்து  தீபக்கிடம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி தலைமையில் பல மணி நேர விசாரணை நடந்தது. இதில் தீபக் குறித்த உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.  கடந்த மாதம் 28ம் தேதி மஞ்சகண்டி வனத்தில் தண்டர்போல்ட் போலீசாருடன் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது என கேட்டதற்கு, நான் அங்கே இல்லை என்றார். மதி, சோனா என இரண்டு பேர் உன்னுடன் வந்திருக்கிறார்கள், ஏன் மறைக்கிறாய்  என போலீசார் கேட்டபோது, ‘‘என்னுடன் 2 பேர் வந்திருந்தால் நீங்கள் தேடி போய் பிடிக்கலாமே, ஏன் பிடிக்கவில்லை’’ என பதில் தெரிவித்துள்ளார். இதுபோன்று முக்கிய கேள்விகளுக்கு பதில் வராததால் போலீசார் அதிருப்தி அடைந்தனர். எனவே, சிகிச்சை முடிந்த பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: