பைப்லைன் உடைப்பை சீரமைக்காமல் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்

* மெத்தனப்போக்கில் அதிகாரிகள்

* துரைப்பாக்கம் மக்கள் தவிப்பு

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, தேரடி தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியாக இருந்தபோது, தெருக்களில் பிளாஸ்டிக் குழாய் மூலம் பைப்லைன் அமைத்து, பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன், குடிநீர் வாரியம் மூலம் தெரு குழாய் அகற்றப்பட்டு, கைப்பம்பு அமைத்து குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது. இந்த கைப்பம்புகளில் தண்ணீர் பிடிக்க முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படும் நிலை உள்ளதால், இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போஸ்ட் ஆபிஸ் தெரு தவிர மற்ற இடங்களில் கைபம்ப்பை  அகற்றி விட்டு, மீண்டும் தெரு குழாய் அமைத்தனர்.

மற்ற தெருக்களை போல், போஸ்ட் ஆபிஸ் தெருவிலும் கைப்பம்பை அகற்றி விட்டு குழாய் அமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த போஸ்ட் ஆபிஸ் தெருவில் பைப்லைன் உடைப்பு காரணமாக, கைப்பம்பில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. கருப்பு நிறத்தில் உள்ள இந்த குடிநீர் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குளிப்பதற்கும், பாத்திரம் சுத்தம் செய்வதற்கும் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டால் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றனர். வசதி படைத்தவர்கள் ஏதேனும் குடிநீர் சம்பந்தமாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, பைப்லைன் உடைப்பை சீரமைத்து, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: