காற்றில் பறந்த நில உச்சவரம்பு சட்டம் 3 ஆண்டாக சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியல் தயாரிப்பு: சார்பதிவாளர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் சொத்து வாங்கியவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நில உச்சவரம்பு சட்டப்படி விவரங்கள் பெறாதது ஏன் என்று பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் 1961ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டப்படி தனிநபர் 15 ஏக்கர் வரை சொத்து வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்துக்கு மேல் கூடுதலாக வைத்திருப்பதை கண்காணிக்கும் வேளையை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு மாதம் அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை சார்பதிவாளர் அலுவலங்களில்  பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட படிவம்-15யை தாசில்தார் பெற வேண்டும். ஆனால், இது போன்று சொத்து விவரங்களை சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவின் போது பெறுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமீபகாலமாக அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள் தங்களது பெயரிலும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து படிவம் 15ல் பெறப்பட்ட தகவல்களை சேகரித்து கடந்த 4ம் தேதி காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க பதிவுத்துறை ஐஜி அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும், கடந்த 4ம் தேதி பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆவணப்பதிவின் போது ஆவணதாரர்களால் படிவம் 15 ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை.

விவசாயம் நிலம் ஏதும் இல்லை என்பதால் படிவம் 15ல் பெறப்படவில்லை என்று ஐஜி அலுவலகத்துக்கு பதில் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி இனி வருங்காலங்களில் சொத்து விவரங்களை பெறா விட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் ஒரு சில சார்பதிவாளர்கள் அலுவலங்களில் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்களிடம் படிவம் 15ல் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. அந்த படிவத்தில் அவர்களிடம் உள்ள சொத்துக்கள், தற்போது உள்ள சொத்துக்கள், அந்த சொத்து எங்கெங்கு உள்ளது மற்றும் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், மரங்கள் மற்றும் அதன் மதிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்த படிவத்தில் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை, நெல்லை, தஞ்சை, கோவை மண்டலங்களில் உள்ள பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், ஆரணி உள்ளிட்ட பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் படிவம் 15 பெறப்படாத நிலையில் இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சார்பதிவாளர்கள் அளித்த அறிக்கையை பதிவுத்துறை ஐஜி கடந்த 5ம் தேதி தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையை வைத்து நில உச்சவரம்பு சட்டப்படி அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்போரிடம் இருந்து மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த 2016 நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு புதிதாக சொத்து வாங்கியவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி அலுவலகம் அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்து ஐஜி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் சார்பதிவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் 1961ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

* இந்த சட்டப்படி தனிநபர் 15 ஏக்கர் வரை சொத்து வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அந்த நிலத்துக்கு மேல் கூடுதலாக வைத்திருப்பதை கண்காணிக்கும் வேளையை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: