மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி சென்னையில் 50 ஆயிரம் வீடுகளில் இல்லை: விரைந்து முடிக்க ஆணையர் பிரகாஷ் உத்தரவு

சென்னை: சென்னையில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 3 லட்சம் வீடுகளில் 50 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வரலாறு காணாத வறட்சி காரணமாக சென்னை மாநகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதேபோல், புறநகர் பகுதியில் உள்ள ஏரி, கல் குட்டைகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டது. எனவே, வரும் காலங்களில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் இவற்றை ஆய்வு செய்ய குழுக்களும் அமைக்கப்பட்டன.

அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்ய வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுக்கள் வீடுவீடாக சென்று மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வார்டுக்கு 1000 வீடுகள் வீதம் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது வரை இந்த குழுக்கள் 3,72,236 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் 2,08,371 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 34,157 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட வேண்டும். மேலும் 27,137  வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர்த்து 50,665 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் ஆய்வு செய்யும் போது ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள கட்டிடங்களில் நீல நிற வில்லைகளும், புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் பச்சை நிற வில்லைகளும் ஒட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 54,073 வீடுகளில் வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

318 சமுதாய கிணறுகள்:

மழைநீர் சேகரிப்பு ஆய்வின் போது சென்னை மாநகராட்சி சார்பில் 118 சமுதாய கிணறுகளும், குடிநீர் வாரியம் சார்பில் 200 சமுதாய கிணறுகளும் கண்டறியப்பட்டுளளன. இவற்றை சீரமைக்கும் பணியில் இரு அமைப்புகளும் ஈடுபட்டுவருகிறது.

Related Stories: