பணிச்சுமையால் பணிகள் முடங்கி வரும் நிலையில் தமிழக பொதுப்பணித்துறையில் 30 உதவியாளர் பணியிடம் சரண்டர்: ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 30 உதவியாளர் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டு இருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் என 8 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில் அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காததால், காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, தற்போது வரை 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காததால் திட்ட அறிக்கை, ஒப்பந்தப்புள்ளி தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கி போய் உள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்பக்கோரி பொதுப்பணித்துறையில் பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், 30 உதவியாளர் பணியிடங்களை சரண்டர் செய்து இணை தலைமை பொறியாளர் ராணி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, சென்னை நீர்வளப்பிரிவு சிறப்பு வடிவமைப்பு கோட்டத்தில் 7 உதவியாளர் பணியிடங்களும், பணிமனை மற்றும் பண்டகசாலை கோட்டத்தில் 10ம், சென்னை மண்டல முதன்மை தலைமை பொறியாளர் கட்டிடம் 5 என 30 பணியிடங்களை சரண்டர் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 11 நிர்வாக அலுவலர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீர்வளபிரிவு திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர், அணை இயக்ககம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர், அணை பாதுகாப்பு வட்டம், முதன்மை தலைமை பொறியாளர் கட்டிடம் உட்பட 11 நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பணியிடங்கள் உருவாக்கியதன் மூலம் ரூ.83 லட்சம் வரை அரசுக்கு செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் உதவியாளர் பணியிடங்களை குறைப்பதால் ரூ.84 லட்சம் மிச்சமாகிறது என்று அந்த அறிக்கையில் இணை தலைமை பொறியாளர் ராணி கூறியுள்ளார்.

தற்போது, இளநிலை உதவியாளர் 1663 பணியிடங்களில் 34ம், உதவியாளர் 879 பணியிடங்களில் 166ம், தட்டச்சர் 561ல் 189ம், காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பாமல் ஏற்கனவே உள்ள பணியிடங்களை குறைப்பதன் மூலம் திட்ட பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு சில கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்காகவே உதவியாளர் பணியிடங்கள் குறைக்கப்பட்டு நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று பொதுப்பணித்துறை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories: