திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: குமரி மலை பகுதிகளில் கனமழை

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் மழை சற்று ஓய்ந்து வெயில் அடித்ததால் கோதையாற்றில் தண்ணீர் குறைந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று குமரி மாவட்ட மலை பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற பகுதிகளில் கனமழை கொட்டியது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சிற்றாறு அணையில் இருந்து உபரியாக வந்த 273 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழை நீருடன் அணை நீரும் சேர்ந்ததால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து இன்று மீண்டும் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அருவியில் குளிக்க அனுமதிக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். என்றாலும் அருவியின் அருகில் நின்று ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தை ரசித்துவிட்டு திரும்பினர்.

Related Stories: