அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை தமிழக மக்கள் மதித்து நடக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தீர்ப்பை மதித்து சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதிப்பூங்கா மாநிலமாக திகழச் செய்யுங்கள் என்று முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ அனைத்து மத, கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா அமைப்பினர் சரிசமமாக பிரித்துக் கொள்ள தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இப்பிரச்னையை தீர்த்து வைக்க நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 4 மாதங்களாக இந்த குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து 40 நாட்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிடுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: