உண்ணாவிரதம் இருந்து உடல் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு தரப்பட்ட சிகிச்சை என்ன? : சிறைத்துறை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முருகனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள  முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார்.  இதைக்கண்டித்து அவர் சிறைக்குள் கடந்த 15 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவரது உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை சந்திக்க நளினி மற்றும் அவரது உறவினர்களுக்கு அனுமதி வழங்கக்கோரியும், முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கக்கோரியும் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக சிறைத்துறை தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: