மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மூடப்பட்ட 68 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கிறது தமிழக அரசு

* படிப்படியாக 400 கடைகள் வரை திறக்க முடிவு

சென்னை : உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 68 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க உள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க எந்த தடையும் இல்லை எனக்கூறியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் 1,700 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மாநில சாலைகளில் புதிய கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதன் மீதான விசாரணையில், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எந்தெந்த பகுதிகளில் விற்பனை உரிமம் வழங்கலாம் என்பதன் வழிகாட்டு நெரிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சில மாற்றங்களை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறக்க உள்ளது. முதல்கட்டமாக 68 கடைகளையும், படிப்படியாக 400 கடைகள் வரையும் திறக்க உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய மூன்று இடங்களிலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்துகொள்ளலாம் என கூறியது. இதை அடிப்படையாக வைத்துத்தான் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் முதலில் 6,700 டாஸ்மாக் கடைகள் இருந்தன. பின்னர், 1,000 டாஸ்மாக் கடைகளை அரசு மூடியது.

எனவே, 5,700 கடைகளுக்குள் வரைதான் தமிழகத்தில் செயல்பட முடியும். தற்போது 5,200 கடைகள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கடைகளை திறந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டதால் அந்த பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி முதல்கட்டமாக மூடப்பட்ட 68 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதுவும் உடனடியாக திறக்க முடியாது. மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்படும். பின்னர், ஆர்.டி.ஓவிற்கு அது அனுப்பப்படும். பிரச்னை ஏதும் இல்லை என தெரியவரும் பட்சத்திலேயே அந்த பகுதிகளில் கடைகள் திறக்கப்படும். மேலும், 2 முதல் 3 மாதங்களுக்குள் இந்த கடைகள் திறக்கப்படும். பின்னர், படிப்படியாக மூடப்பட்ட கடைகள் திறக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: