இரண்டாவது முறையாக ஜேப்பியார் கல்வி குழுமத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு : பணம், ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு

சென்னை: ஜேப்பியார் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் முறைகேடு குறித்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தவர் ஜேப்பியார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார். சென்னையில் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளை தொடங்கி நடத்தி வந்தார். ஜேப்பியார் மறைவுக்குப் பிறகு அவரது மகள் மற்றும் மருமகன்கள் கல்லூரிகளை கவனித்து வருகின்றனர். இந்தக் குழுமத்துக்கு சொந்தமாக, சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரி, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் துறைமுக அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு இதே குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கியது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. ஆனாலும், அவர்கள் வரி முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், கல்லூரிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் வந்த புகாரைத் தொடர்ந்து தற்போது 2வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: