ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை

சென்னை: சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்தில் வருமானவரித்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 2016ம் ஆண்டு ஜேப்பியார் கல்விக்குழுமத்தில் இதேபோல் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அந்த சமயம், நாடு முழுவதும் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் கணக்கில் காட்டப்பட்ட 500, 1000 ரூபாயை மக்கள் தைரியமாக வங்கிகளில் மாற்றியும் டெபாசிட் செய்தனர். ஆனால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களால் அதை மாற்ற முடியவில்லை. இதனால்,சிலர் குறுக்கு வழியில் பணத்தை மாற்றுவதாக தகவல் வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஜேப்பியார் கல்வி குழுமத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், ரூ.8 கோடி மதிப்புள்ள 1000, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேப்பியார் கல்வி குழுமத்தின் உரிமையாளர் வீடு, கல்லூரி அலுவலகம், உறவினர்களின் வீடு, நிர்வாகிகளின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நடந்து வரும் சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பதா? என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories: