சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய வட மாநிலத்தவர் 2 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள  நகைக்கடையில் நகை திருட்டு  போனது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்த போலீசார் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா நகர் தனியார் விற்பனை நிறுவனமான கனிஷ்க் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை வாங்குவது போல் நடித்து இரண்டு நபர்கள் நகைகளை திருடி சென்றுவிட்டதாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் நகை வாங்குவது போலவும், நகைகளை பார்ப்பது போலவும் பாவனை செய்து அங்குள்ள விற்பனை பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை எடுத்து மற்றோரு நபரிடம் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. அதன் பின்னர் எந்த நகைகளையும் வாங்காமல் பிறகு வாங்கி கொள்கிறோம் என்று கூறிவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து நகைகளை சரிபார்க்கும் பொருட்டு ஒரு தங்க சங்கிலியை காணவில்லை என விற்பனை பெண்கள் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அந்த நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வடமாநில கொள்ளையர்களை அண்ணா நகர் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்றைய தினம் இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்குமார், சுனில்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும்  சென்னையில்  மட்டுமல்லாமல் பல இடங்களில் இதுபோன்று நகைக்கடைகளில் நகைகளை திருடி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: